எரிந்திரா சிறு குறிப்பு -
இலத்தீன் அமெரிக்கா மீதான ஐரோப்பாவின் காலனியாதிக்கத்தைக் கலையினுள் எதிர்கொண்டு, பின்காலனிய அரசியலைப் பேசும் கதையாகும் எரிந்திரா. பதினான்கு வயது பேத்தியை விபச்சாரத்தில் தள்ளும் பாட்டி, அதிலிருந்து தப்பமுடியாத எரிந்திராவின் மேல் மையல்கொள்ளும் யூலிசஸ் ஆகியோரின் துன்பியற் காதல் கதை. தன் நலனுக்காக எதையும் செய்யவல்லது பூர்சுவா சமூகம் என்பதன் நகலான பாட்டி, தனது விடுதலைக்காக யூலிசசைப் பயன்படுத்திக் கொள்ளும் எரிந்திரா, காதல் கனியாது கடற்கரையில் கண்கலங்கும் யூலிசஸ் ஆகியோரின் வழியாக இலத்தீன் அமெரிக்காவின் பொன்றாப் புகழுடைய கதையாகிறது எரிந்திரா.
கொலம்பிய அரைப்பாலை நிலப்பரப்புகளில் புத்தகங்கள் விற்று வாழ்வை ஓட்டிக் கொண்டிருந்த மார்க்வெஸ், புழுக்கமான ஓர் இரவில் அறைவிடுதியில் கேள்விப்பட்ட கதை இது. நடமாடும் விபச்சார விடுதி. தட்டுமுட்டுச் சாமான்கள் ஏற்றப்பட்ட வண்டிகளுடனும் அமெரிந்தியர்களுடனும் பாட்டி கழுதை மீதமர்ந்திருக்க நாய்ச்சங்கிலியால் பிணைக்கப்பட்டு எரிந்திரா நடந்து செல்லும் படிமம் காலம் கடந்தும் நிற்கும். தமது விதியை தாம் தீர்மானிக்கும் உரிமையற்ற சமூகத்தினர் நேரிடும் சுரண்டலின், ஒடுக்குமுறையின் கதையே இது. இடதுசாரி விழுமியங்களைக் கொண்டிருந்த எழுத்தாளர் மார்க்வெஸ் என்பதையும் நாம் நினைவிற்கொள்வோம்.
இரா. சுகந்தன்